மதுரை: நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றிவந்த பெண் காவல் ஆய்வாளர் வசந்தி, இளையான்குடியைச் சேர்ந்த வியாபாரி அர்ஷத் என்பவரிடம் ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, வசந்தி பிணைக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு இன்று(அக்.8) விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பிலிருந்து, "வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர், நேற்று விசாரணைக்காக ஆஜரானார். ஓரளவிற்கு ஒத்துழைப்பு தருகிறார். ஏற்கனவே வசந்தி மீது 3 வழக்குகள் உள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, "காவல் ஆய்வாளர் வசந்திக்கு நிபந்தனை பிணை வழங்கப்படுகிறது. அத்துடன் தொடர்ந்து 30 நாள்களுக்கு சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.
விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒருவேளை விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றாலோ, சாட்சிகளை கலைக்க முயன்றாலோ, அரசு தரப்பில் பிணை மனுவை ரத்து செய்யக்கோரலாம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காவல் ஆய்வாளர் வசந்தியின் கணவர் 1 மணிநேரத்தில் ஆஜராக வேண்டும் - நீதிமன்றம் கறார்