அலங்காநல்லூரில் கடந்த ஜனவரி 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்தப்போட்டியில் முதல் சுற்றில் களம் இறங்கிய மதுரை விராட்டிபத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் கண்ணன், இறுதிச்சுற்று வரை விளையாடி 12 காளைகளை பிடித்து, சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நன்கொடையாக வழங்கிய, 6 லட்ச ரூபாய் மதிப்புள்ள கார் பரிசாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜல்லிக்கட்டில் பரிசு பெறுவதற்காக ஆள்மாறாட்டம் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 33 ஆம் எண்ணாக தொடக்கத்தில் பதிவு செய்திருந்த ஹரிகிருஷ்ணன் என்பவர், முதல் மூன்று சுற்று விளையாடி காளைகளை பிடித்திருந்த நிலையில் காயமுற்று வெளியேறியபோது, விராட்டிபத்து கண்ணனிடம் தனது பனியனை மாற்றி கொடுத்ததாகவும், அதன்பிறகு அவர் களத்தில் இறங்கி காளைகளைப் பிடித்து முதலிடம் வென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இப்போட்டியில் 9 காளைகளைப் பிடித்து இரண்டாமிடம் பெற்ற 244 எண் கொண்ட கருப்பணன் என்ற மாடுபிடி வீரர், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இக்குற்றச்சாட்டை முன்வைத்து புகாரளித்துள்ளார்.
இது தொடர்பாக விராட்டிபத்து கண்ணனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, குற்றச்சாட்டை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார். முதல் சுற்றிலிருந்து தான் விளையாடிய வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும், இதன் பின்னணியில் ஜாதி ரீதியான நோக்கம் உள்ளது என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். வரும் 27 ஆம் தேதி முதலமைச்சர் மதுரை வரும்போது, எனக்குரிய பரிசை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து கோட்டாட்சியர் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மசினகுடியில் யானை உயிரிழப்பு: மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டிலை வீசி தீப்பற்ற வைத்தது அம்பலம்