மதுரை மாவட்டம் அதலையை சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவைத் தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில், அரிய வகை உயிரினங்கள், விலங்குகள், மரங்கள் போன்றவை உள்ளன. அதேபோல் 229 வகையான அரிய இன மரங்கள், 31 வகையான பாலூட்டி வகைகள், 15 வகையான பறவைகள், 43 வகையான ஊர்வன போன்ற அரிய வகை உயிரினங்கள் காணப்படுகின்றன. இவை சமீப காலமாக பணத்திற்காக ஆசைப்பட்டு பலரும் கடத்துவதும், அழிப்பதும் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது போன்ற செயல்களால், தட்ப வெட்ப நிலை மாற்றமடைவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரித்து வருகிறது. இது குறித்து யுனெஸ்கோ போன்ற அமைப்புகளும் எச்சரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வனப் பகுதிகளிலும் இது போன்ற அரிய வகை உயிரினங்கள் அழிக்கப்பட்டு வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வனத்துறை பாதுகாவலர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே உள்ளனர். இவர்களால் இது போன்ற குற்றங்களை தடுத்து நிறுத்த இயலாது. எனவே, கர்நாடகா, அசாம் போன்ற மாநிலங்களில் உள்ளது போல், தமிழ்நாடு காவல் துறையிலும், சிபிசிஐடி பிரிவில் வனப்பாதுகாப்பிற்கென ஒரு பிரிவை உருவாக்க வேண்டும்.
இதில் அனைத்து காவல் நிலையங்களில் இத்தகைய வனக் குற்றங்களை விசாரிப்பதற்கென்று, துணை ஆய்வாளர் தகுதியிலான அலுவலரை நியமிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில அரசு, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 7- ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.