மதுரை: மதுரை, சிந்தாமணி பகுதியைச் சேர்ந்த கிருபா பிரியதர்ஷினி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "பாலியல் துன்புறுத்தலால் பாதிப்படைந்துள்ள பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவது தவறு என போக்சோ சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடுவது குற்றம் என சட்டங்களில் உள்ளது. பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த செய்திகளில் தொலைக்காட்சி, ஊடகங்களுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை சார்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. ஆனால், அவை சரிவரப் பின்பற்றப்படுவதில்லை.
எனவே, பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், அவர்களின் அடையாளங்களை வெளிப்படுத்தாமல் இருக்க போக்சோ சட்டம், இந்தியப் பத்திரிகை கவுன்சில் சட்டம் மற்றும் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை முறையாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்களை வெளிப்படுத்தும் செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களின் உரிமத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்.
செய்தியாளர்களும் மனிதர்கள் தானே!
செய்தித்தாள்கள், ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண் குழந்தைகளின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய சைபர் கிரைம் உருவாக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், செய்திகளை நாம் உடனடியாக அறிந்து கொள்ளத் தொலைக்காட்சி ஊடகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் பெருமளவில் உதவியாக உள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பல்வேறு உதவிகள் கிடைத்து வருகின்றன.
செய்தியாளர்களும் மனிதர்கள் தானே; நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வழங்குவதால் எந்த ஒரு பயனும் இல்லை, அதனை ஊடகத்துறையினர் கடைபிடிக்க வேண்டும்.
ஆனால், சிலர் முறையாக கடைபிடிப்பது இல்லை எனக் கருத்து தெரிவித்து நீதிபதிகள் அமர்வு, வழக்கு குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறைச் செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் மதுரை மிகவும் பின் தங்கியே உள்ளது - மா.சுப்பிரமணியன் கவலை