மதுரை: இராமநாதபுரம் மாவட்டம், மாங்காட்டைச் சேர்ந்தவர் பூபதி ராஜா. இவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கேணிக்கரையிலுள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டுக்கடன் வாங்கினேன். மாத தவணையை முறையாக செலுத்தி வந்தேன்.
கரோனா ஊரடங்கால் தவணைகளை உரிய முறையில் செலுத்த முடியவில்லை. இதனால், வங்கியின் வசூல் பிரிவினர் வீட்டுக்கு வந்து தகாத வார்த்தைகளில் திட்டுகின்றனர். குடும்பத்தினரை மிரட்டுகின்றனர். அடிக்கடி தொந்தரவு செய்கின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, ‘‘கடன் வசூல் செய்யும் தனியார் ஏஜென்சிகள் சட்டவிரோதமாக நடப்பதை தடுக்க முடியாதா? இவர்கள், ஏழைகளிடம் தான் அதிகளவு கெடுபிடி காட்டுகின்றனர். ஆயிரக்கணக்கான கோடியில் கடன் வாங்கி செலுத்தாவர்களிடம் கெடுபிடியை காட்டுவதில்லை’’ என்றனர்.
மேலும் நீதிபதிகள், ‘‘கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற விவகாரங்களில் ரிசர்வ் வங்கி தரப்பில் எத்தனை குற்றவியல் புகார்கள் பெறப்பட்டுள்ளன? வங்கி அலுவலர்கள், கடன் வசூல் ஏஜென்சிகள் சட்டவிரோதமாக செயல்படுகிறார்களா? இதை தவிர்க்க என்ன செய்வது? கடன் வசூலில் தனியார் ஏஜென்சிகளை தவிர்க்கலாமா என்பது குறித்து மத்திய நிதித்துறை செயலர், ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 9ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இதையும் படிங்க: உங்களின் கடனை மறுசீரமைக்க நினைக்கிறீர்களா? இவற்றை தெரிந்து கொள்ளுங்கள்!