திருநெல்வேலியை சேர்ந்தவர் சுந்தரவேல் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில்,
- திருநெல்வேலியில் உள்ள பிரான்ஞ்சேரி குளம், சுப்ரமணியபுரம் கேத குளம் ஆகிய குளங்களில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகின்றன.
- அரசு விதிப்படி கண்மாய், குளங்களை தூர்வாரிய பின், அதை சமம் செய்து தண்ணீரை சேமிக்க வழிவகை செய்ய வேண்டும்.
- கண்மாய், குளங்களில் உள்ள மண்ணின் உயரத்தை 3/4 அடியாக உயர்த்த வேண்டும். ஆனால் தற்போது நடந்து வரும் தூர்வாரும் பணிகளில் எங்கும் இந்த விதி பின்பற்றப்படவில்லை.
- தூர்வாரும் பணி முடிந்த பின்பு கண்மாய் குளக்கரையின் தரத்தை, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தின் பொறியாளர்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பது அரசின் விதி. ஆனால் இது போன்ற எந்த விதியும் பின்பற்றுவதில்லை.
இது குறித்து கடந்த ஜூன் 25ஆம் தேதி உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில கண்மாய்களில் கழிவு நீர் கலந்து தொற்றுநோய் உண்டாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விவசாயத்திற்கு உபயோகம் செய்யும் தண்ணீரில் கழிவு நீர் கலப்பதால், விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
இதேபோல், தமிழகத்தில் பல கண்மாய்கள், குளங்கள் சரியான முறையில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதில்லை. நீர்நிலைகளை தூர்வாரி முறையாக பராமரிக்க, நபார்டு வங்கி தமிழகத்திற்கு 500 கோடி ரூபாய் நீதி வழங்கியுள்ளது, அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. எனவே தமிழ்நாட்டில் உள்ள கண்மாய், குளங்களில் தூர்வாரும் பணியை அரசு விதிப்படி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கின் விசாரனை இன்று நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி முன்னிலையில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் நீர்நிலைகள் எந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் தூர்வாரப்படுகின்றன? என்பது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித்துறை முதன்மை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வருகிற செப்டம்பர் 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.