சென்னையிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வருகை புரிந்த வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில்,'ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துக் கட்சி நிர்வாகிகளையும் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து மக்களின் நலனை மட்டுமே மையமாகக்கொண்டு திமுக அரசு செயல்படும். கரோனா இரண்டாவது அலையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் அனைத்துக் கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்பட உள்ளோம்.
அரசு மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் பரவல் தடுப்பு மையங்கள் விரிவாக ஏற்பாடு செய்து அதற்குத் தீர்வு காணப்படும்.
மக்கள் நல்வாழ்வுத் துறை, வருவாய்த்துறை, காவல் துறை சார்ந்த அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து நாளை மறுநாள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டம் ஒன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அதில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளோம்.
கரோனா அறிகுறி உள்ளவர்களை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு, மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். இதனை நாளை மறுதினம் முதல் பதினைந்து செவிலியர் மூலம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
மதுரை அரசு மருத்துவமனை மட்டுமல்ல மேலூர், திருமங்கலம் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இருக்கக்கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
அதேபோல சித்த மருத்துவமனையில் இன்று மக்களுக்கு உடனடியாகத் தீர்வு காண்பதற்காகவும் சோதனை செய்வதற்கும்; ஒரு நாளைக்கு 50 ஆயிரம் பேரை அந்த சோதனையில் ஈடுபடுத்துவதற்காகவும்; 2 ஆயிரத்து 500 பேர் வந்திருக்கிறார்கள்.
இதுவரை 2 லட்சத்து 50 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பினால் டோக் பெருமாட்டி கல்லூரியில் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் இயங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.
அதே போன்று மதுரையில் உள்ள 55 தனியார் மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ளன. என்னை 49 ஆயிரத்து 64 வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாவது முறையாக வெற்றி பெறச் செய்த மதுரை கிழக்குத் தொகுதி வாக்காளர்களுக்கு இந்த நேரத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க:மதுரையில் ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் பெற ஆம்புலன்ஸ்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!