மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரவீன் குமார், மதுரை காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர், வேகமாக பைக்கில் சென்றதற்காக அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இரவு அனுப்பானடி பகுதியில் பிரவீன் குமார் சென்றபோது, எட்டு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
அதன்பின் தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தெப்பக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அருண் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த கல்லூரி மாணவன் பிரவீன் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சமுதாயக் கல்லூரி, அழகர்கோயில் சாலையில் உள்ள சுவர்களில் பிரவீன் கொலைக்கு காத்திருந்து பழிவாங்கப் போவது போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அச்சேற்றப்பட்ட சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதேபோன்று புதூர் பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஓட்டி, அதில் கூறியதுபோல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த எச்சரிக்கை சுவரொட்டிகளால் காவல் துறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.