திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த செந்தில்ராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனக்கும், எனது உறவினர் வைகுண்டராஜனுக்கும் இடையே சொத்துக்கள் பிரிப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இதனிடையே நீதிமன்றம் சொத்துக்களை இருதரப்பினர் முன்னிலையில் கணக்கிட உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2021ஆம் ஏப்ரல் 22ஆம் தேதி வல்லன்விளை பகுதியில் உள்ள விவி மினரல்ஸ் தொழிற்சாலையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒளிப்பதிவாருடன் கணக்கிடும் பணி தொடங்கியது.
அப்போது விலை உயர்ந்த எந்திரங்கள் காணாமல் போயிருந்தன. இதனை ஒளிப்பதிவாளர் பதிவு செய்தார். அப்போது வைகுண்டராஜனும், அவருடன் இருந்தவர்களும் ஒளிப்பதிவாளரையும் எங்களையும் தாக்கினர். இதனால் ரூ.6 1/2 லட்சம் மதிப்புள்ள கேமராவை உடைந்தது. இதுதொடர்பாக உவரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வழக்கு பதியப்படவில்லை.
இதைத்தொடர்ந்து மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டும், முறையான விசாரணை நடைபெறவில்லை. உபரி காவல் ஆய்வாளரும் வைகுண்டராஜனுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். ஆகவே, இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். இதனையேற்ற நீதிபதி வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வெளிப்படைத் தன்மையுடன் பேரூராட்சி ஒப்பந்தங்களை நடத்த உத்தரவு