மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல்செய்திருந்த மனுவில், "கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு தற்போது உலகையே அச்சுறுத்திவருகிறது. தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பாதிப்பைத் தடுப்பதற்காகப் பலமுறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் தொற்றுப் பரவல் குறைந்தபாடில்லை.
எனவே, கரோனா பரவலைக் கட்டுப்படுத்திடும் வகையில், சமூக இடைவெளியைப் பின்பற்றாதவர்களுக்கு அதிகளவிலான அபராதம் விதிக்கவும், கரோனா ஆராய்ச்சி நிலையங்களை அதிகரிக்கவும், ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்குமாறும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், எஸ். ஆனந்தி ஆகியோர், கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள், ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. இதை மீறுவோர் மீது பேரிடர் தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வழிவகை உள்ளது.
எனவே, வழிகாட்டு நெறிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டு மனுவை முடித்துவைத்தனர்.