மதுரை சோனைநகரைச் சேர்ந்த பகவத்சிங் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை அரசியலமைப்பு அட்டவணை 8இல் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிட வேண்டும்.
அதனடிப்படையில் அந்தந்த மாநில மக்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்பு, தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என உத்தரவிடக் கோரி வழக்கறிஞர்கள் பகத்சிங் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொது நலமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தீபக் நாதன் என்பவர் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்திருந்தார்.
கூடுதல் மனுவின் வழக்கறிஞர் ஹென்றி டிபேன் கூறியதாவது, பார்வை குறைபாடு உடையோர், செவித்திறன் குறைபாடு உடையோர் உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையை, அவர்கள் முழுவதும் படிக்கும் வகையில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. அவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
கடந்த சில வாரங்களாக நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. எனவே, மாற்றுத்திறனாளிகள், செவித்திறன் குறைபாடு உடையோர் உள்ளிட்டோர் தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை முழுவதும் படிக்கும் வகையில் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர், தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை, ஆங்கிலம், இந்தியில் வழங்கப்பட்டுள்ளது. பிற மாநில மொழிகளில் அதனுடைய சுருக்கம் மொழி பெயர்த்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்த்து வழங்க வேண்டும என்பது தேவையற்றது. மேலும் விரிவான கருத்துக் கேட்பு நடைபெற்றுவருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதம், கருத்துகள் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் மத்திய, மாநில ஆணையர்கள் எதிர் மனுதாரராக சேர்க்கப்படுகின்றனர்.
தேசிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையை, மாற்றுத் திறனாளிகள் கேட்கும், படிக்கும் வகையில் வழங்குவது குறித்தும், அவர்களிடம் கருத்து கேட்பது குறித்தும் மாற்றுத் திறனாளிகளின் நலத் துறையின் மத்திய, மாநில ஆணையர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.