மதுரை: மாட்டுத்தாவணி அருகே உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்தில் தென் மாவட்டங்களில் இருந்து பல்வேறு வகையான பூக்கள் விற்பனைக்கு வருகின்றன. குறிப்பாக மதுரை மல்லிகைக்கு உலகளாவிய சந்தை இருக்கின்ற காரணத்தால், இங்கிருந்து பல டன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
தற்போது கரோனா இரண்டாவது அலையின் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மலர்களின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக மதுரை மல்லிகையின் விலை கிலோ 80 ரூபாய்வரை விற்பனையானது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை 2 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் மே 24ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று மளிகைப் பொருட்கள், அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிக் கொள்வதற்காக முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் மதுரை மலர்ச் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் மிக அதிகமாக காணப்பட்டது. மேலும் இன்று முகூர்த்த நாள் என்பதால் அடுத்து வருகின்ற முகூர்த்த நாட்களில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அனைத்தும் இன்றே பெரும்பாலான இடங்களில் நடைபெற்று முடிந்துள்ளன.
இதன் காரணமாக மதுரை மலர்ச் சந்தையில் பூக்களின் விலையில் கணிசமான ஏற்றம் இருந்தது. மதுரை மல்லிகை கிலோ 500 ரூபாய், சம்பங்கி கிலோ 70 ரூபாய், அரளி கிலோ 70 ரூபாய், முல்லை கிலோ 300 ரூபாய், பிச்சி கிலோ 250 ரூபாய், கனகாம்பரம் கிலோ 400 ரூபாய், பட்டன் ரோஸ் கிலோ 150 ரூபாய் என அனைத்து வகையான பூக்களும் இன்று கணிசமான விலை ஏற்றத்தைச் சந்தித்தது. நாளை முதல் அமல்படுத்தப்பட உள்ள முழு அடைப்பின் காரணமாக இந்த விலையேற்றம் இருந்ததாக சில்லறைப் பூ விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'அண்ணாந்து பார்க்க வைத்த கல்யாணம்' - விமானத்திற்குள் டும்.. டும்.. சத்தம்