மதுரை சந்திப்பு ரயில் நிலையம் எதிரில் உள்ள ராணி மங்கம்மாள் சத்திரத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் புதிய அலுவலகம் இன்று திறக்கப்பட்டது. அலுவலகத்தினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் நன்மாறன் திறந்து வைத்தார்.
தெடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், "பொதுமக்களிடம் இருந்து 1,500 மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு முதல் நிதியாக ரூ. 25 லட்சம் கொடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் அதிகப்படியாக பிரதமரின் மருத்துவ நிதி உதவியாக 47 லட்சம் ரூபாயை பயனாளிகளுக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறோம். மொத்த வைகை ஆற்றுக்கான புத்துயிர் ஆக்கும் குழு அமைக்க வேண்டும். இதன் மூலமாகவே வைகையை காப்பாற்ற முடியும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "ஐஐடி மாணவி தற்கொலை விவகாரத்தில் முழுமையான விசாரணை வேண்டும். பாத்திமா லத்தீப்பின் பெற்றோர் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதில் சொல்லியே ஆக வேண்டும். சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படியே கேரள அரசு செயல்படுகிறது" என்றார்.
இந்த விழாவில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் சரவணன் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'சபரிமலையில் பெண்களை அனுமதிக்க மறுத்தால் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்!'