கரோனா வைரஸ் பெருந்தொற்று முன்களப் பணியாளர்களின் வாழ்வியலை மிகப் பெருமளவில் பாதித்து வருகிறது. குறிப்பாக கரோனா தொற்று காரணமாக காவல் துறையில் மட்டும் நூற்றுக்கணக்கான நபர்கள் பாதிக்கப்பட்டு, பலர் உயிரிழந்தும் உள்ளனர்.
கரோனால் இவ்வாறு பல்வேறு பாதிப்புகளை காவலர்கள் சந்தித்து வரும் நிலையில், தங்களது உயிரைக் காப்பாற்றக்கோரி எமனுக்கு காவலர் ஒருவர் விண்ணப்பித்துள்ள கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இக்கடிதத்தில், காவலர், தமிழ்நாடு காவல்துறை, தமிழ்நாடு என அனுப்புநர் பகுதியில் முகவரியிடப்பட்டும், பெறுநர் பகுதியில் உயர்திரு எமதர்ம ராஜா அவர்கள், எமலோகம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"நாங்கள் எவ்வளவு துன்பத்திற்கும் துயரத்திற்கும் ஆளானாலும் மக்களின் நலன் காக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எங்களுக்கு என்று சில விருப்பக் கடமைகள் இருப்பதால், அதை மட்டுமாவது நிறைவேற்ற வாழ்நாள் நீட்டிப்பு வழங்கி உதவுமாறு பாதம் தொட்டு வேண்டுகிறோம்.
அதையும் தாண்டி நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை முடிந்துவிட்டதாக நீங்கள் கருதினால், எங்களின் மரணம் சாதாரண மரணமாக இல்லாமல் நாட்டுக்காக உயிரை விடும் வீர மரணமாகவே இருக்க வேண்டும் என்பதே எங்களின் கடைசி விருப்பம்.
இந்தக் கடிதம் உங்களின் பார்வைக்கு கிடைத்ததும் காவலர்களின் உயிரைப் பறிக்கும் விஷயத்தில் சற்று கருணை காட்டுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம். இப்படிக்கு, தங்கள் உறவை விரும்பாத காவலர்” என்ற ரீதியில் அந்தக் கடிதம் முடிவடைகிறது.
மதுரையைச் சேர்ந்த காவல் ஒருவர் எழுதியதாகக் கூறப்படும் இந்தக் கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 'சூரரைப் போற்று' சுவரொட்டி ஒட்டி ரசிகர்கள் வேதனை: செவிமடுப்பாரா சூர்யா?