மதுரை திருப்பரங்குன்றம் சட்ப்பேரவைத் தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் சரவணனுக்கு சீட் வழங்கக்கோரி திமுகவினர் சிம்மக்கல் பகுதியில் உள்ள கருணாநிதி சிலைக்கு கடிதம் எழுதி அதனை மனுவாக கொடுத்தனர். சட்டசபைத்தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சி புறநகர் கிழக்கு மாவட்டச் செயலாளர் விவி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர் கடந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த முறை அங்கிருந்து தொகுதி மாறி திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் முன்னாள் அமைச்சர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாத்துரை போட்டியிடுகிறார். திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் இறந்ததால் நடந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் சரவணன், ஆளும்கட்சி செல்வாக்கை தாண்டி வெற்றி பெற்றார்.
அதிமுக எட்டு முறை வெற்றி பெற்ற இந்தத் தொகுதியில், திமுக வேட்பாளர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதால் இந்த முறை மீண்டும் திமுகவே நேரடியாக போட்டியிடும் என்றும், அக்கட்சி சார்பில் தற்போதைய எம்எல்ஏ டாக்டர் சரணவனே நிறுத்தப்படுவார் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
கடைசி நேரத்தில் இந்தத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், டாக்டர் சரவணன் ஆதரவாளர்கள், அதிருப்தியில் உள்ளனர். திமுக வேட்பாளர் பட்டியல் நேற்றைய முன்தினம் (மார்ச் 12) வெளியான நிலையில், மருத்துவர் சரவணனுக்கு சீட் கிடைக்காததால் பல்வேறு போராட்டங்களை அவரது ஆதரவாளர்களும், திமுகவினரும் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடிதம் ஒன்றை எழுதி கலைஞர் சிலை முன் வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். கடிதத்தில் திமுக வேட்பாளர் பட்டியலில் குறைபாடு உள்ளதாகவும், அதனை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தினர்.
இந்நிலையில் திமுகவில் சீட் வழங்காததையடுத்து, திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் இன்று (மார்ச் 14) பாஜக-வில் இணைந்தார்.
இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு