மதுரை, சின்னசொக்கிக்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சிறையில் இருக்கும் மன நோயாளிகள், சிறைவாசிகளின் மனநலத்தைப் பேணும் வகையில் சிறப்பு மனநல சிகிச்சைக் குழுவினை திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் அமைக்கக்கோரி வழக்கு தொடர்ந்தேன். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து அலுவலர்களுக்கு மனு அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தது.
உறவினர்களைக் கொலைசெய்த குற்றங்களில் சிறையில் இருப்பவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சென்னை மனநல அமைப்பு மட்டுமே சிறைவாசிகளுக்கு மனநல சிகிச்சை அளிக்கும் மையமாக உள்ளது. இவற்றைக் கருத்தில்கொண்டு திருச்சி மத்திய சிறை அல்லது மதுரை மத்திய சிறையில் மனநல சிகிச்சை வழங்கும் சிறப்பு மருத்துவ வசதி ஏற்படுத்தக்கோரி அலுவலர்களிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
ஆகவே மதுரை அல்லது திருச்சி மத்திய சிறையில் மனநல ஆலோசகர், மனநல சிகிச்சையில் பயிற்சிபெற்ற சமூக ஆர்வலர், செவிலியர், மருந்தாளுநர் ஆகியோரைக் கொண்ட சிறப்பு மனநல சிகிச்சை அமைப்பை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, "இன்றைய சூழலில் குறிப்பாக கரோனா ஊரடங்கிற்குப் பின்னர் பெரும்பாலானவர்கள் மனநல பிரச்சனைகளுக்கு ஆளாகியுள்ளனர். காவல் துறையினர் வன்முறை மனோபாவத்துடன் நடந்து கொள்வது, லஞ்சம் வாங்குவது போன்றவையும் மனநல பிரச்சனைகளின் வெளிப்பாடே. குடும்பத்தினருடன் நேரம் செலவிட, தூங்க வாய்ப்பு கிடைக்காததன் வெளிப்பாடே இவை. கரோனா ஊரடங்கிற்கு பிந்தைய நிலையில், அனைவருமே மனநல பிரச்சனைகளோடே உள்ளனர். குடும்பப்பிரச்சனைகள் எழவும் இவையே காரணம். மனநல மருத்துவர்களே அதிகம் தேவை" எனத் தெரிவித்தனர்.
அரசுத் தரப்பில், தமிழ்நாடு சிறைகளில் இருப்போரின் தேவைக்காக மனநல சிகிச்சை மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கில் சிலவற்றை கவனத்தில்கொள்ள வேண்டுமென்பதால், வழக்கை வரும் நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.