மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் காலத்தில் உருவாக்கப்பட்ட தமுக்கம் மைதானம் தெலுங்கில் 'தமுகமு' என அழைக்கப்பட்டது. இதன் பொருள் விளையாட்டு மைதானம் என்பதாகும்.
ராணி மங்கம்மாள் காலத்தில் மைதானத்தின் அருகே உருவாக்கப்பட்ட அவரது கோடை வாச ஸ்தலமாகிய இன்றைய காந்தி அருங்காட்சியகத்தின் மேலிருந்து அவர் விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டுக்களித்த செய்திகளும் உண்டு.
இது குறித்து மதுரை மாவட்ட முன்னாள் மைய நூலகரும் எழுத்தாளருமான பாண்டுரங்கன் கூறுகையில், "திருமலைநாயக்கர் காலத்தில் தமுக்கம் மைதானம் உருவாக்கப்பட்டிருந்தாலும், ராணி மங்கம்மாள் தான் அதனை மேம்படுத்தினார். இன்றைக்கு இருக்கக்கூடிய காந்தி அருங்காட்சியகம் ராணி மங்கம்மாள் அரண்மனை ஆகும்.
அதன் மேல் மாடத்திலிருந்து தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் யானை, காளை, எருது, சேவல் சண்டைகளை ரசித்திருக்கிறார். மேலும் மற்போர் புரியும் வீரர்கள் இங்கே தங்களது வீரதீர சாகசங்களை நிகழ்த்தி காட்டியுள்ளனர்" என்றார்.
1670களில் உருவாக்கப்பட்ட இந்த மைதானம் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை கொண்டதாகும். இந்திய விடுதலை போராட்ட காலத்தில் தேசிய தலைவர்கள் பலர் இந்த மைதானத்தில் இருந்து தான் உரையாற்றி பொதுமக்களிடம் விடுதலை போராட்ட எழுச்சியை ஏற்படுத்தினர்.
இந்திய விடுதலைக்குப் பிறகும் ஜவகர்லால் நேரு, ராஜேந்திர பிரசாத், திலகர் உள்ளிட்ட தலைவர்களோடு தமிழ்நாட்டின் பெரும்பாலான தலைவர்கள் இந்த தமுக்கம் மைதானத்தில் தான் தங்களின் அரசியல் கூட்டங்களை நடத்தினர்.
இதனால் பல தலைவர்களின் சரணலாயமாகவே தமுக்கம் மைதானம் இருந்தது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தமுக்கம் மைதானத்திற்கு தனி இடம் உண்டு.
இந்தி எதிர்ப்பு போராட்டம், ஈழத் தமிழர் உரிமை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் இங்கு அரங்கேறியுள்ளது.
2017இல் நடைபெற்ற ஜல்லிக்கட்டு மீட்பு போராட்டத்தில் ஒட்டுமொத்த மதுரை மக்களையும் இந்த மைதானம் அரவணைத்துக் கொண்டது.
இங்கு நடைபெற்ற ஒவ்வொரு கண்காட்சிகளும் மதுரை வாழ் மக்களுக்கு கண்கொள்ளாக் காட்சிதான். மைதானத்தின் வெளியே அமைந்துள்ள தமிழன்னை சிலை, உள்ளே அமைந்துள்ள சுவாமி சங்கரதாஸ் கலையரங்கம், இப்படி வரலாற்றுச் சிறப்புமிக்க இடமாகவும், வரலாற்றை மீட்ட இடமாகவும் தமுக்கம் மைதானம் இருந்தது.
ஆனால் தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக தமுக்கம் மைதானம் முழுவதுமாக இடிக்கப்பட்டு, அடுத்த ஓராண்டு காலத்திற்குள் மிக நவீன அரங்கமாக மாற்றப்படவுள்ளது என மதுரை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவீனம் தேவைதான். ஏனென்றால் அது நாகரிக வளர்ச்சிக்கான அடையாளம். அதற்காக நாகரிகத்தை அழித்துவிட்டு, வளர்ச்சியை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது. மதுரையின் நாகரிக தொட்டிலான தமுக்கம் மைதானத்திற்கு குட் பை!
இதையும் படிங்க; இவர்கள் சிங்கப் பெண்களல்ல... பருத்திப் பெண்கள்...!