மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இயங்கும் 24 மணி நேர கரோனா வைரஸ் நோய் அவசர கால கட்டுப்பாட்டு மையத்தை பார்வையிட்ட பின்னர், வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”கரோனா பரிசோதனைக் கருவியான ’ரேபிட் கிட்’, பாதிப்பின் முன்னுரிமை அடிப்படையில் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
20ஆம் தேதிக்கு பிறகு எந்தெந்த தொழில்களை மீண்டும் தொடங்க அனுமதிக்கலாம் என்பது குறித்து கடந்த 3 நாட்களாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் கரோனா அவசர கால கட்டுப்பாட்டு அறையில் இதுவரை 2,199 கோரிக்கை தொடர்பான அழைப்புகள் வந்துள்ளன. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
மாவட்டம் முழுவதும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறைகளைச் சேர்ந்த 17,854 நபர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அத்தியாவசியமின்றி வெளியே வந்த 10,820 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 60 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள், நரிக்குறவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல், மதுரை மாவட்டத்தில் 2,137 மாற்றுத்திறனாளிகளின் அவசரகால கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன “ எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கரோனா விழிப்புணர்வு களத்தில் இறங்கிய கல்லூரி மாணவி - சபாஷ் சந்திரலேகா