மதுரை: மூத்தத் தமிழறிஞர் இளங்குமரனார் மதுரையில் உள்ள அவரது வீட்டில் முதுமை காரணமாக நேற்றிரவு (ஜூலை 25) இயற்கை எய்தினார்.
மூத்தத் தமிழறிஞரும் தமிழ் ஆசிரியருமான இளங்குமரனார், தமிழ் மொழிக்கு ஆற்றிய பெரும் தொண்டின் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தால் முதுமுனைவர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழ் இலக்கியம் தொடர்பாக 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி சாதனை படைத்தவர்.
செந்தமிழ் சொற்பொருள்களஞ்சியம் 14 தொகுதிகளும், தேவநேயப்பாவணர் குறித்த ஆய்வு நூல்களான 'தேவநேயம்' 10 தொகுதிகளும் இவரது தமிழ் தொண்டிற்கு முக்கிய சான்றுகளாய் திகழ்கின்றன.
மதுரையில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற இளங்குமரனாரின் இயற்பெயர் கிருஷ்ணன். எட்டாவது குழந்தையென்பதால் இப்பெயர் வைக்கப்பட்டது. தனித்தமிழ் இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டபின் பெயரை மாற்றிக்கொண்டார். மனைவி செல்வம் முன்பே இறந்து விட்டார். கலைமணி, இளங்கோ, பாரதி, திலகவதி என இவருக்கு நான்கு பிள்ளைகள்.
திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரத்தில் பிறந்தவர் இவர். மதுரை திருநகர் இராமன்தெருவில் உள்ள இவரது இல்லத்தில் நேற்றிரவு (ஜூலை 25) 7.30 மணிக்கு இயற்கை எய்தினார். இந்நிலையில், இன்று (ஜூலை 26) மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.
இதையும் படிங்க: ராமதாஸ் பிறந்தநாள் - வாழ்த்து கூறிய அரசியல் தலைவர்களுக்கு நன்றி