மதுரை: தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் மதுரையில் அமைத்திட வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மருந்துசார் அறிவியலில் மேம்பட்ட படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்காக 1998இல் சட்டம் இயற்றப்பட்டு, தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இந்திய தொழில்நுட்பக் கழகத்துக்கு நிகராக, மருந்துசார் தொழில் வளர்ச்சி, மருந்துசார் அறிவியல் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கு சர்வதேச தரத்துடன் செயல்படுவதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
மருத்துவம் சார்ந்த நடவடிக்கைகள் அதிகரிக்கும்
மருத்துவ ரசாயனம், பாரம்பரிய மருந்துகள், மருந்து பகுப்பாய்வு, மருந்தியல் மற்றும் நச்சுயியல், மருந்துகள், மருந்து தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, உயிரி தொழில்நுட்பம், மருந்தியல் நிர்வாகம் போன்ற முதுகலைப் படிப்புகளும், முனைவர் பட்டம் அளவிலான படிப்புகளையும் உள்ளடக்கியது.
இந்தப் படிப்புகள் மூலம் நாடு முழுக்க திறனுள்ள மருந்துகள் கண்காணிக்கப்பட வழிவகுப்பதோடு, ஏனைய மருத்துவ தொழில், வணிக நடவடிக்கைகளும் அதிகரிக்கும்.
2011, ஜனவரி 20ஆம் தேதி நடைபெற்ற எட்டாவது நிதி ஆணையக் கூட்டத்தில் தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தை மதுரையில் அமைத்திட பரிந்துரைக்கப்பட்டது.
இதற்கு 2011, செப்டம்பர் 13ஆம் தேதி மத்திய அமைச்சரவையிலும் ஒப்புதல் வழங்கப்பட்டது. 2016, ஜூன் 13ஆம் தேதி மத்திய செலவினங்கள் துறையும் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. 2018, மார்ச் 26ஆம் தேதி நிதி ஆணையத்தின் முன்பு இந்தக் கோப்பு மறுஆய்வும் செய்யப்பட்டுள்ளது.
செயல்படுத்தப்படாத மையம்
தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம் (NIPER) மதுரையில் அமைக்கப்பட ஏறக்குறைய 12 ஆண்டுகள் ஆகியும் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. மதுரையில் NIPER அமைக்க தமிழ்நாடு அரசு மதுரை மாவட்டம், திருமோகூர் அருகே 116 ஏக்கர் நிலத்தை இலவசமாக ஒதுக்கியுள்ளது. மேலும் உள்கட்டமைப்புகளை அமைப்பதற்காக 1,100 கோடி ரூபாய் வழங்க மத்திய நிதி அமைச்சகத்திடம் முன்மொழிவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எட்டாவது நிதிக்குழுவினால் 8 NIPER மையங்கள் அமைக்க 2011-ம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்டு அதில் ஒன்று தமிழ்நாட்டில் மதுரையில் அமைக்கப்படும் என்று அன்றைய அமைச்சரவையும் உறுதிப்படுத்தியது.
மேற்கண்ட 8 NIPER களில் 7 NIPER கள் அகமதாபாத், கவுகாத்தி, ஐதராபாத், ஹாஜீபூர், கொல்கத்தா, மொகாலி, லக்னோ ஆகிய இடங்களில் ஏற்கனவே அமைக்கப்பட்டு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் இப்பட்டியலில் இடம் பெற்ற மதுரையில் மட்டும் ‘நைபர்’ அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
முதன்மை மாநிலம் தமிழ்நாடு
இந்தியாவிலேயே முதன்முதலில் மருந்து பூங்காவை அமைத்த மாநிலம் தமிழ்நாடு. 1979ஆம் ஆண்டு சென்னையில் உள்ள ஆலந்தூரில் இந்த பூங்கா தொடங்கப்பட்டது. 1979ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் புதிய மருந்துப் பூங்கா எதுவும் அமைக்கப்படவில்லை.
15வது நிதிக்கமிஷனில் (2020-25ஆம் ஆண்டு) மதுரையில் நைபர் (NIPER) கல்வி நிறுவனத்தை நிறுவிட மத்திய அரசிடம் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு இதற்கான அனுமதியை வழங்கினால் வரும் கல்வியாண்டிலேயே நைபர் நிறுவனம் செயல்பாட்டிற்கு வரும்.
மதுரையில் செயல்பாட்டிற்கு வரும் எய்ம்ஸ்சுடன் இணைந்து நைபரும் மாணவர் சேர்க்கையைத் துவக்க இயலும். நைபர் நிறுவனத்திற்கான சொந்த வளாகம் உருவாகும் வரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலேயே குறைந்தது மூன்று ஆண்டுகள் இயங்குவதற்கான அனுமதியும் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு வாய்ப்பாக அமையும்
மதுரையில் நைபர் கல்வி நிறுவனம் அமைவது, மருந்தியல் துறையின் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு மிகப் பெரிய உந்துதலாக அமையும். நைபர் நிறுவனத்தோடு காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து பல்வேறு மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புகளை மாணவர்களுக்கு வழங்க புதிய வாய்ப்புகளும் ஏற்படும்.
மதுரை மருத்துவ முனையமாக மாறுவதுடன், தொழில், வணிக வளர்ச்சியையும் மேம்படுத்தும். மருத்துவ உற்பத்தித் துறையில் தொழில் முதலீடுகளும் அதிகரிக்கும். சிறந்த மருந்தியல் வல்லுனர்களும் உருவாகுவார்கள், இதனால் மருந்துத் துறை புதிய வளர்ச்சியையும் எட்டும்” என அவர் அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: Cultural Revolution Madurai: நன்னெறியில் வாழ்வோருக்கு அந்தணர் பட்டம் - மதுரையின் பண்பாட்டுப் புரட்சி