மதுரை: ஆரப்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர் ஒருவர், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற கோரி ஜெயச்சந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, வழக்கின் விசாரணையை முடித்து 3 மாதத்திற்குள் குற்றப் பத்திரிக்கையை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டிருந்தார்.
ஆசிரியர் மீதான புகாருக்கு மாணவி மறுப்பு
இந்நிலையில், பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட மாணவி ஒருவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “சம்பந்தப்பட்ட ஆசிரியர் எந்த தவறிலும் ஈடுபடவில்லை. அவர் மீதான புகாரை எனது தந்தை அப்போதே திரும்ப பெற்றார். சம்பந்தப்பட்டவர்களே புகார் அளிக்காதபோது, தொடர்பில்லாத ஒரு நபரால் எப்படி வழக்கு தொடர முடியும். எனவே, அவரது புகாரின் அடிப்படையிலான வழக்கை எனது வாக்குமூலத்தின் அடிப்படையில் முடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
அரசு தரப்பில் வாதம்
இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் வழக்கறிஞர் அன்பு நிதி ஆஜராகி, "மாணவியின் அப்பா அளித்துள்ள புகாரில் தனது மகளுக்கு மட்டும் இந்த பாலியல் தொந்தரவு நடக்கவில்லை. இதேபோல் ஏராளமான மாணவிகளுக்கு நடந்துள்ளது என்று ஏற்கனவே அளித்த புகாரில் கூறியுள்ளார். அதனடிப்படையில் சைல்டு லைன் அமைப்பு, காவல் துறையினர், சமூக நலத்துறை அலுவலர்கள் முழுமையாக விசாரணை செய்தபின் தான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆசிரியரிடமிருந்து செல்போன், பென்ட்ரைவ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆசிரியர் மீது கூறப்பட்ட புகாரில் முகாந்திரம் உள்ளது" என தெரிவித்தார்
இதனை பதிவு செய்த நீதிபதி மாணவியின் கோரிக்கையை ஏற்க மறுத்து இறுதி விசாரணைக்காக ஜூலை 22ஆம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.