மதுரை: அரசு மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட பரிசோதனைச் சான்றிதழ் செல்லாது எனக்கூறி பயணிகளை வெளியேற்றிய ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை விமான நிலையத்திலிருந்து ஸ்பைஸ் ஜெட் விமானம் இன்று 9:15 மணிக்கு துபாய் சென்றது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னை, கோயமுத்தூர், ராமநாடு, காரைக்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளிலிருந்து வந்திருந்த பயணிகள், அதிகாலை முதல் மதுரை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.
இச்சூழலில், குடியேற்றத் துறை சோதனைகள் முடிந்து விமானத்திற்கு செல்லும் முன்பு, 10க்கும் மேற்பட்ட பயணிகளின் கரோனா பரிசோதனை செல்லாது எனக்கூறி விமானத்தில் ஏற்றுவதற்கு விமான நிலைய ஊழியர்கள் மறுத்துள்ளனர்.
இதனால் ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் உடன் பயணிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பேசிய பயணிகள், அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்து சான்றிதழ் எடுத்துள்ளோம். இதனை ஸ்பைஸ் ஜெட் விமான ஊழியர்கள் செல்லாது எனக் கூறுகின்றனர். தனியார் விமானத்தில் 170 பயணிகள் செல்லக்கூடிய விமானத்தில் 200 வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கின்றனர்.
பின்னர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி பயணிகளை விமானத்தில் ஏற்க மறுக்கின்றனர். விமானத்தில் நுழைவுச்சீட்டு முன்பதிவு செய்யும்போது, மூன்று பக்கத்திற்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டதில், எந்த மருத்துவமனையில் கரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்பது குறித்து எந்த ஒரு தகவலும் கொடுக்கவில்லை.
இன்று காலை 9.15 மணிக்கு புறப்படும் விமானத்திற்கு, 8.45 மணிக்கு வேறு இடத்தில் கரோனா பரிசோதனை செய்து வருமாறு விமான நிலைய ஊழியர்கள் கூறுகின்றனர்” என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த விவகாரம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் தனியார் விமான நிலையத்தில் புகார் அளிக்க போவதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.