இயற்கையை நேசிக்க கற்போம்
குழந்தைகளுக்குப் பள்ளிக்கல்வி எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் வகுப்பறையைத் தாண்டிய கற்றலும். சூழல் மாசுபாடு அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில், மரங்களின் அவசியத்தை இன்றைய தலைமுறை உணரத் தலைப்பட்டுவிட்டது. அரையாண்டு விடுமுறையில் என்ன கற்கலாம் என்றால், இயற்கையை நேசிக்கக் கற்கலாம். அதனைப் பேணிக் காக்கவும் கற்கலாம் என்பதுதான் அசோக்குமாரின் பதிலாக இருக்கிறது.
மதுரையில் உள்ள மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் வசிக்கும் இவர் தனது வீட்டிற்கு அருகிலுள்ள குழந்தைகளை அழைத்து, விதைப்பந்து தயாரிப்பது குறித்தும், அதனை எவ்வாறு தூவி விதைப்பது என்பது குறித்தும் களத்திற்கே அழைத்துச்சென்று விளக்குகிறார்.
விதைப்பந்துகள் வீணாகாது!
செம்மண்ணில் தேவையான அளவு சாணமும் நீரும் கலந்து நன்றாகப் பிசையும் இவர்கள் பின்னர் அதன் நடுவே, சேகரித்த விதைகளைப் பொதித்து, உருண்டையாக உருட்டிக் கொள்கின்றனர். அதைத் தொடர்ந்து அவற்றை வெயிலில் காயவைத்த பிறகே தூவுவதற்கு எடுத்துச்செல்கின்றனர்.
சாதாரணமாக வெறும் விதைகளை விதைத்தால் அவை மற்ற உயிரினங்களால் உணவாக்கப்படவோ அல்லது வெப்பத்தால் முளைக்கும் தன்மையை இழக்கவோ நேரிடலாம். அதேநேரத்தில் நிலமானது செடி வளர்வதற்கான தன்மை இல்லாமல் கடினமானதாக இருந்தாலும் விதைகள் முளைக்காது.
ஆனால் விதைப்பந்துகளை தரிசு நிலங்கள், காடுகள், மலைகள் இப்படி எல்லா இடங்களிலும் தூவலாம். ஓராண்டுவரை விதை பத்திரமாக முளைக்க ஏற்றதாக இருக்கும்.
விதைப்பந்துகளோடு விடுமுறை
இந்த நுட்பம், சுற்றுச்சூழலின் அவசியம், நம்மாழ்வரின் வாழ்வியல் ஆகியவற்றை குழந்தைகளுக்கு கதையாகச் சொல்கிறார் அசோக்குமார். குழந்தைகளும் அதனைக் கேட்டுக்கொண்டே தங்களின் விதைப்பந்துகளை தயாரித்துக் கொண்டேயிருக்கின்றனர்.
ஆர்வமாகவும் போட்டிபோட்டுக்கொண்டும் விதைப்பந்துகளை தயாரிக்கும் குழந்தைகள், "அரையாண்டு விடுமுறையை பயனுள்ளதாகக் கழித்துவருகிறோம். மேலும் விதைப்பந்து குறித்த செய்முறையின் மூலமாக இயற்கைக்கும் எங்களால் பங்களிக்க அளிக்க முடிகிறது" என்று கூறுகின்றனர்.
வாழ வழிவிடுவோம்!
நீர்நிலைகள் ஓரமாக அமைந்த கரைகளில், மரங்களற்ற பொட்டல் வெளிகளில் என இடங்களைத் தேர்ந்தெடுத்து, குழந்தைகளை அங்கே அழைத்துச் சென்று விதைப்பந்துகளைத் தூவ அசோக்குமார் ஊக்குவிக்கிறார். நல்ல காற்று, குடிநீர், மண் என அடுத்தடுத்த தலைமுறையும் வாழ, நாம் விட்டுச் செல்ல வேண்டும்.
அந்தக் கடமையை என்னளவில் மட்டுமின்றி, அடுத்த தலைமுறையினருக்கும் சொல்லிக் கொடுப்பதே என்னுடைய தலையாய பணி என்கிறார். குழந்தைகளிடம் விதைக்கின்ற எந்த ஒரு நல்லெண்ணமும் நாளை விருட்சமாய் மாறி சமூகத்திற்கு பெரும் பயனளிக்கும் என்பதை உணர்ந்து, ஆக்கப்பூர்வ தனது பணியை நல்கிவரும் அசோக்குமாரின் பயணம் தொடரட்டும்.
இதையும் படிங்க: