தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, 'எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இந்த அரசை அவர்கள் குற்றம் குறை சொல்ல இயலாது. அதனால் சட்டப்பேரவையில் எதிர்வாதம் செய்ய முடியாமல் செல்கின்றனர்' என்றார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிமுக அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றினால் மக்களின் ஆதரவு இருக்கும் என்று தொல். திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த அரசு சிறுபான்மையினருக்கு அளித்த சலுகைகள் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியபொழுது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு கரும்பிற்கு ஏறத்தாழ 20 ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆகையால் எந்த ஒரு விவசாயியையும் பாதிக்கும் அளவிற்கு அரசு ஈடுபடாது. அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார். அந்த வெற்றிடம் என்பது இல்லை என்று ஒரு வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. சுமார் ஒரு கோடி நேயர்கள் பங்குகொண்ட அந்தக் கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உள்ளனர். அதில் ஆளுமைமிக்கத் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.
இதையும் படிங்க: