காமராசர் பல்கலைக்கழகம் அனைத்து கல்லூரிகளுக்கும் வழங்கிய சுற்றறிக்கை ஒன்றில் தகுதி இல்லாத பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தினார் மாணவர்களுக்கு பதிவு எண் வழங்கப்படமாட்டாது மற்றும் அனுமதி ரத்து செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
இதனையடுத்து மதுரை காமராசர் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த சுய நிதிப் பிரிவு பேராசிரியர்கள் மதுரை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது நமது செய்தியாளருக்கு வக்புவாரிய கல்லூரியின் சுயநிதிப் பிரிவு பேராசிரியர் செல்வராஜ் அளித்த சிறப்புப் பேட்டியில்,
’மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தற்போது அனுப்பி வரும் தொடர் சுற்றறிக்கை காரணமாக எங்களது கல்லூரி நிர்வாகங்கள் சுய நிதிப் பிரிவு பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் அனைத்து கல்லூரிகளிலும் பணியாற்றும் சுய நிதிப் பிரிவு பேராசிரியர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம்.
நாங்கள் பல ஆண்டு காலமாகக் கல்லூரிகளில் குறைந்த சம்பளத்திற்கு பணியாற்றியதோடு, தகுதி வாய்ந்த பல லட்சக்கணக்கான மாணவ மாணவியரை உருவாக்கியுள்ளோம். இந்நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் உத்தரவு எங்களது வாழ்வியலைக் கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வு 2012 மற்றும் 2016ஆம் ஆண்டு என இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்ள இயலவில்லை. மேலும் முனைவர் பட்ட ஆய்வுக்கு சில பாடப்பிரிவுகளுக்கு போதுமான வழிகாட்டிகள் இல்லாததால், அதனையும் எங்களால் பதிவு செய்ய முடியவில்லை தற்போது தமிழ்நாடு முழுவதும் ஏறக்குறைய 35 ஆயிரம் பேர் சுயநிதிப் பிரிவுகளில் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் உடனடியாக பல்கலைக்கழகங்கள் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும். ஆகையால் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தலின்படி எங்களது தகுதியை மேம்படுத்திக் கொள்ள எங்களுக்கு மேலும் 5 ஆண்டுக் கால அவகாசம் வழங்க வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்’ என்றார்