சேலம்: ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும், நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்துவந்தனர். இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜூன் 23ஆம் தேதி அன்று, கல்லூரிக்குச் சென்ற மாணவர் கோகுல்ராஜ் நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
குற்றவாளிகள் கைதும் - டிஎஸ்பி தற்கொலையும்
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவையின் நிறுவனர் யுவராஜ், அவரது கூட்டாளிகள் 17 பேரும் நீண்ட தலைமறைவுக்குப் பின் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த காவல் துணைக் கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியாவும் தற்கொலை செய்துகொண்ட நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கான சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
அரசு வழக்கறிஞர் மாற்றம்
இதனைத் தொடர்ந்து, நாமக்கல் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 2018 ஆகஸ்ட் 30ஆம் தேதி விசாரணையும் தொடங்கியது. இந்த வழக்கில் கோகுல்ராஜின் காதலி சுவாதி உள்பட மொத்தம் 116 சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவந்த நிலையில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை மாற்றக் கோரி கோகுல்ராஜின் தாயார் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை மாற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்புத் தனி நீதிமன்றத்தில் விசாரணை
இதையடுத்து, அரசு வழக்கறிஞர் மாற்றப்பட்டு இந்த வழக்கானது 2019 மே 5ஆம் தேதிமுதல் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வன்கொடுமைத் தடுப்புச் சிறப்புத் தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கானது, இறுதிக்கட்ட விசாரணையை எட்டியுள்ள நிலையில் நேற்று (டிசம்பர் 6) வன்கொடுமை தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சம்பத்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின்போது கைதுசெய்யப்பட்ட யுவராஜ், அவரது கூட்டாளிகள் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்டனர்.
வழக்கு ஒத்திவைப்பு
இதனையடுத்து, இருதரப்பினரின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். யுவராஜ், அவரது கூட்டாளிகள் மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற வளாகத்தில் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
இதையும் படிங்க: மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு