மதுரையிலுள்ள அமெரிக்கன் கல்லூரி பொருளாதாரத்துறை சார்பாக நடைபெற்ற கருத்தரங்கில் பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன் பங்கேற்றார். அப்போது ஈடிவி பாரத் செய்திகளுக்கு பிரத்தியேகப் பேட்டி அளித்தார்.
அதில் நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்த கருத்துகளை பகிர்ந்துகொண்ட ஜெயரஞ்சன், ஐ.ஐ.பி. எனப்படும் தொழில்துறை உற்பத்திக் குறியீடு பொருளாதார நிலை தொடர்பாகச் சிறியளவிலான நம்பிக்கையைத் தருகிறது. பெரும் வீழ்ச்சி தற்போது நிலவி வரும் போதும் ஒரு சில துறைகள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகத் தெரிய வருகிறது எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், பொருளாதாரச் சிக்கலுக்குகான மூலகாரணம் டிமாண்ட் எனப்படும் தேவையில் ஏற்பட்டுள்ள குறைவுதான். குறிப்பாக ஊரகத் துறையில் மிகப்பெரிய தேக்கம் உள்ளது. இதை சரிசெய்ய நீண்டநாட்களாக கோரிக்கை வைக்கப்பட்டுவருகிறது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும். மூடப்படும் நிலையில் உள்ள மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டம் போன்றவற்றை ஊக்குவித்தல் போன்ற நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
அரசின் அறிவிப்புகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், சில மாதங்களுக்கு முன் விவசாயம் சார்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு 60 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. விவசாயிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை போன்ற அறிவிப்புகள் பயனாளிகளை சென்றடைந்ததா என்று தெரியவில்லை. எனவே அறிவிப்பின் பலன்களாக முன்னேற்றம் காணப்பட்டதாகத் தெரியவில்லை. அரசு பற்றாக்குறைப் பற்றிக் கவலைப்படாமல் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டால் மாற்றம் வரும் என எதிர்பார்க்கலாம் என்றார்.