மதுரை: சென்னை, கோயம்புத்தூர் தவிர தமிழ்நாட்டில் உள்ள 13 மாநகராட்சிகளில் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மூன்று ஆண்டுகளில் வரி வசூல் செய்யப்பட வேண்டிய தொகை, வசூல் செய்யப்பட்ட தொகை, நிலுவையில் உள்ள தொகை, நிலுவை வைத்துள்ளோரின் பெயர் பட்டியல் போன்ற தகவல்களைக் கோரி சென்னையைச் சேர்ந்த ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் நகராட்சி நிர்வாக இயக்குநரக அலுவலகத்திற்கு விண்ணப்பித்திருந்தார்.
அதனடிப்படையில் மேல் முறையீடு செய்து பெறப்பட்ட தகவலில், மேற்குறிப்பிட்ட 13 மாநகராட்சிகளில் விதிக்கப்படும் 7 விதமான வரிகளில், மொத்தமாக வசூல் செய்யப்பட வேண்டிய தொகை ரூ.5 ஆயிரத்து 855 கோடி ஆகும். ஆனால் இதுவரை மொத்தம் வசூல் செய்யப்பட்ட தொகை ரூ.2 ஆயிரத்து 333 கோடி. வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள தொகை ரூ.3 ஆயிரத்து 522 கோடி என பதில் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலர் காசிமாயன் கூறுகையில், "சென்னை, கோவை தவிர்த்த பிற மாநகராட்சிகளில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் மொத்த வரி வசூல் 40 விழுக்காடாக உள்ளது.
மேலும் வரி வசூல் செய்யப்படாமல் நிலுவையில் உள்ள வரி 60 விழுக்காடாக உள்ளது. வசூலாக வேண்டிய சொத்து வரி ரூ.2 ஆயிரத்து 759 கோடியாக உள்ளது. ஆனால் ரூ.1,207 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள ரூ.1,552 கோடி ரூபாயை வசூலிப்பதில் மாநகராட்சி நிர்வாகங்களுக்கு என்ன சிக்கல் என தெரியவில்லை.
நிலுவையிலுள்ள வரி பாக்கியை வசூல் செய்தால் மாநகராட்சிகளில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியும் எனும் நிலையில், வரி பாக்கி வைத்திருப்போரில் பெரும்பாலானோர் பணம் படைத்தவர்களாய் உள்ளனர். ஆகையால் மாநகராட்சி நிர்வாகங்கள் வரி பாக்கியில் கடுமை காட்டுவது அவசியம்" என்றார்.
இதையும் படிங்க: சென்னையில் இரட்டை அடுக்கு பறக்கும் பாலம் - அமைச்சர் எ.வ.வேலு