மதுரை: மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தமிழர் ஆய்வு மையம், ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் அன்று மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையத்தில் சமத்துவப் பொங்கல் விழாவை கடந்த 22 ஆண்டுகளாகக் கொண்டாடிவருகிறது.
அதுமட்டுமன்றி சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை குறள் வழிச் சாலையாக அறிவிப்பதுடன் குறள் வழிப் பூங்காக்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறது.
கருணாநிதியிலிருந்து எடப்பாடி வரை...
இது குறித்து சி.ஜே. ராஜன் நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு நேர்காணல் வழங்கினார். அப்போது பேசிய அவர், "மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அமைக்கப்பட்ட 1999ஆம் ஆண்டிலிருந்து கடந்த 22 ஆண்டுகளாக ஒவ்வொரு தைப் பொங்கலன்றும் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடிவருகிறோம்.
இவ்விழாவில் சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களும், மதுரை மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். இந்த விழாவின்போது சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை குறள் வழிச் சாலையாக அறிவிக்க வேண்டும் எனவும், அந்தச் சாலையின் இரண்டு புறமும் குறள் வழிப் பூங்காக்கள் அமைக்க வேண்டும் எனவும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்.தமிழ்நாடு முதலமைச்சர்களாக இருந்த கருணாநிதி, ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி வரை அனைவரிடமும் இந்தக் கருத்துருவை அனுப்பி ஒப்புதல் அளிக்கக் கோரியிருந்தோம்.
குறள் சாலையாக அறிவியுங்கள்!
தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் கடந்த ஜனவரி 11ஆம் தேதி இந்தக் கருத்துருவை அனுப்பியுள்ளோம். அவரது காலத்திலாவது எங்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றி அறிவிப்புச் செய்ய வேண்டும்.
உலகப் பொதுமறை தந்த வள்ளுவனின் புகழைப் பரப்புவது மட்டுமன்றி, திருக்குறளின் கருத்துகள் இந்தியர்களுக்கு மட்டுமன்றி உலக மாந்தர்கள் அனைவரிடமும் சென்று சேர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம். சென்னை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையை குறள் வழிச் சாலையாக அறிவித்து, இரண்டு புறமும் பூங்காங்கள் அமைப்பதுடன், அவற்றில் 1330 குறட்பாக்களையும் பொருளுடன் எழுதிவைக்க வேண்டும்.
அந்தப் பூங்காக்களில் மண் சார்ந்த உணவு வகைகளைக் கொண்ட உணவகங்களும், தமிழர் பெருமையைப் பறைசாற்றும் ஓவியங்களும், 24 மணி நேர ஆம்புலன்ஸுடன் கூடிய உயிர்காப்பு மருத்துவமனைகளையும் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும்.
இச்சாலை அமைந்தால் உலகுக்கே முன்னுதாரணம்!
தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட தேசிய மொழிகளில் குறட்பாக்களை உரை விளக்கத்துடன் எழுதி வைக்கும்போது, சுற்றுலாப் பயணிகள் தமிழின் பெருமையையும், மரபையும் உணர்ந்து செல்வதற்கு வாய்ப்பாக அமையும்.
மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் நிகழும் விபத்துகளைத் தடுப்பதற்கு அங்கு அமைக்கப்படும் மருத்துவமனைகளும் மிகப் பயனுள்ளதாக இருக்கும். அடுத்து வருகின்ற எதிர்காலத் தலைமுறையினருக்கு குறளின் பெருமையை எளிதாகக் கொண்டுசெல்ல முடியும். குறள் பூங்காக்கள் அமையவுள்ள பகுதிகளில் உள்ள ஊர்களின் மரபார்ந்த பெருமைகளையும் விளக்குவதற்கு வழி செய்தால், தமிழ் மண்ணின் மண் சார்ந்த பெருமிதங்களை வெளிமாநிலத்தவரும், வெளிநாட்டாரும் உணர வாய்ப்பு ஏற்படும். இப்படியொரு சாலையை அமைப்பது இந்தியாவிற்கு மட்டுமன்றி, உலக நாடுகளுக்கும் முன்னுதாரணமாக அமையும்" என்றார்.