மதுரை மேலக்கோட்டையைச் சேர்ந்த பால்ராஜ், திண்டுக்கலைச் சேர்ந்த ஆனந்தன் ஆகிய இருவரும், (சிக்கலான ரத்தநாளம்) இதயத்தில் இருந்து ரத்தம் உடலுக்குச் செல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில், மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களை, மருத்துவர்கள் பரிசோதித்தபோது ரத்தநாளம் வீக்கம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து, மிகவும் சவாலான இந்த சிகிச்சையை சரியாக செய்து முடித்து மருத்தவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த டீன் சங்கு மணி, இந்த அறுவை சிகிச்சையை ரத்தநாள சிகிச்சை துறை தலைவர் டாக்டர். சரவணன் ராபின்சன் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்துள்ளனர் என்றும், இது கடினமான அறுவை சிகிச்சை என்பதால் இந்த இரண்டு நோயாளிகளின் மீதும் அதிக கவனம் செலுத்தி சிகிச்சை அளித்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஸ்ட் புட் உணவு வகைகள் உண்பது, மதுபானங்கள் அருந்துவதால் இந்த நோய் வர வாய்ப்புள்ளதாகவும், இவற்றுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற 6 முதல் 8 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் கூறினார்.