சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலையத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் திட்டப்பணிகள், புதிய திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித் துறை செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர், “நிதித் துறை, பொதுப்பணி துறை ஆகிய இரண்டு துறைகளின் செயல்பாடு மாநில வளர்ச்சிக்கு அவசியம். சமூகத்திற்கு சேவை செய்வதுதான் நமது முக்கிய இலக்கு. முதலமைச்சர் எப்போது தூங்குகிறார், எப்போது எழுந்திருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. நேரம் காலம் பார்க்காமல் மக்களுக்காக உழைத்து வருகிறார். ஒரு நடவடிக்கை எடுக்கத் தொடங்கினால், தொடர் நடவடிக்கையாக பின் தொடர்வார். அதுதான் அவரின் சிறப்பு. முதலமைச்சர் எப்போது வேண்டுமானாலும் யாரோடு வேண்டுமானாலும் பேசுவார்” என்றார்.
மதுரையில் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகம், 250 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கிங்ஸ் மருத்துவமனையில் உள்ள பல்நோக்கு மருத்துவமனை, கீ.ராஜநாராயணன் மணி மண்டபம் அமைப்பதற்கான மதீப்பீடுவரைபடங்களை விரைந்து வழங்க அமைச்சர் எ.வ. வேலு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அண்ணா நூலகத்தை ஹிலாரி கிளிண்டன் பாராட்டியது போல மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகம் இருக்க வேண்டும் என அமைச்சர் அறிவுத்தினார்.
கரோனா காலத்தில் 12,000 ஆக்ஸிஜன் படுக்கைகளை அமைத்த பொறியாளர்களை பாராட்டினார்.
11 இடங்களில் கட்டப்பட்டுவரும் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடங்களை இந்தாண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
புதிதாகப் பிரிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களுக்கான மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம், பல்வேறு அரசு துறைகளுக்கு கட்டப்பட்டுவரும் பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு கேட்டறிந்தார்.