மதுரை திருப்பரங்குன்றம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் டாக்டர் சரவணன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், "தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதித்தவர்களுக்கு உரிய பரிசோதனை செய்வதில் விரைவான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பரிசோதனைகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலைக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
உடனடியாக பரிசோதனை முடிவுகள் கிடைக்காமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே, இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் கருவிகள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கு தடை விதிக்கப்பட்டதால், உள்நாட்டிலேயே கருவிகளை தயாரிக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ரேபிட் கருவி மூலம் கரோனா பரிசோதனை செய்ய ரூ. 500 மட்டுமே செலவாகும். இந்த கருவி மூலம் பரிசோதனை செய்து, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பதை அறிந்து கொள்ளலாம்.
எனவே, ரேபிட் கருவிகளை அதிகளவில் கொள்முதல் செய்து விரைவான பரிசோதனை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயனன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் வீர கதிரவன், தற்போது கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து தரப்பு மக்களையும் பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால், ரேபிட் கிட் உதவியாக இருக்கும் என்றார்.
இதைத் தொடர்ந்து, வழக்குக்கு தேவையான மருத்துவ குறிப்புகள் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒரு வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.