மதுரை: மகாத்மா காந்தி ஜெயந்தியை யொட்டி மதுரை காந்தி அருங்காட்சியகத்திலுள்ள அவரது சிலைக்குப் பாஜக மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “விடுதலை பெற்ற இந்தியாவில் காங்கிரசிற்குப் பணியில்லை, காங்கிரஸ் கட்சியை கலைத்துவிடுங்கள் என முதலில் கூறியவர் அண்ணல் காந்தி.
அன்று காந்தியடிகள் கூறிய வார்த்தை காப்பாற்றபட்டிருந்தால் காங்கிரசுக்கு தற்போது இந்த அவலநிலை ஏற்பட்டிருக்காது. அப்போதே முடிந்து போயிருக்க வேண்டிய விஷயம். கோட்சே குறித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதில் மாற்றுக் கருத்து இல்லை. கோட்சேவிற்குப் பாஜகவினர் ஆதரவு தெரிவிப்பதாக சமூகவலைதளங்களில் தவறான கருத்து பரப்பபடுகிறது.
கோட்சே குறித்து அகில இந்திய தலைமையின் முடிவை மாநில தலைவர் அண்ணாமலை தெளிவுபடுத்தியுள்ளார். அதில் இரண்டாவது கருத்து இருக்க முடியாது. எல்லோரும் பெட்ரோல், டீசல் விலை குறைய வேண்டும் என விரும்புகின்றனர். பெட்ரோல், டீசல் விலை குறைக்க வேண்டும் என விலையேற்றம் ஏற்பட்டிருப்பது ஒன்றிய அரசுக்கு சந்தோஷம் இல்லை, விலைய குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்கள் திறக்க அனுமதியளிக்க வேண்டும்
பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்கு கொண்டுவரகூடாது என மாநில அரசுகள் சொல்கிறது. ஒன்றிய அரசுக்கு இதில் சம்பந்தமே இல்லை. ஒன்றிய அரசு எல்லா மாநிலங்களையும் ஒருங்கிணைக்கவே செய்கிறது. நாடாளுமன்ற, சட்டப்பேரவைத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
ஐந்து ஆண்டு கால செயல்பாட்டுக்கு உடனே எப்படி மதிப்பெண் கொடுப்பது. திமுக அரசின் செயல்பாடு ப்ளஸ், மைனாஸாக தான் உள்ளது. அரசியல் கூட்டங்கள் நடத்தலாம், தேர்தல் நடத்தலாம் ஆனால் கோயில்களில் மட்டும் மக்கள் கூட தடை. கோயில்களைத் திறந்து பக்தர்கள் செல்ல அனுமதியளிக்க வேண்டும். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: உலகுக்கோர் சித்தாந்தத்தைக் வழங்கிய கிழவர் - காந்தியடிகளுக்கு கமல் புகழாரம்!