மதுரை: கே.கே. நகர் பகுதியிலுள்ள சுப்பையா காலனியைச் சேர்ந்தவர் முனிராஜ் (39). இவர் மதுரை ஆவின் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். அண்ணாநகர் பகுதியில் பால் விநியோகம் செய்துவிட்டு தனது வாகனத்தை முனிராஜ் நிறுத்திவிட்டுச் சென்றிருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ஆவின் பால் விநியோக வாகனத்தைத் திருடிக்கொண்டு தப்பிச்சென்றார். இத்திருட்டுச் சம்பவம் தொடர்பாக மாநகர காவல் துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல் துறை ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து காவல் துறையினர் மாநகர் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், அடையாளம் தெரியாத நபரால் திருடப்பட்ட ஆவின் பால் வாகனம் தெற்குவாசல் பகுதியில் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தனிப்படை காவல் துறையினர் விரைந்து சென்றபோது, வாகனம் தெற்குவாசல் காவல் நிலையம் அருகே விபத்துக்குள்ளாகி நின்றது.
பிறகு அந்த வாகனத்தை ஓட்டிச் சென்ற நபரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டபோது, கோயம்புத்தூர் மாவட்டம் ஒண்டிபுதூரைச் சேர்ந்த சதீஷ்குமார் (29) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்நபரைக் கைதுசெய்து, காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: முன்விரோத பகை: கழுத்தை அறுத்துக் கொலைசெய்த ஐவர் கைது