மதுரை: ராமநாதபுரம் மோர் பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் என்ற திருமுருகன் என்பவர் உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டம் ராஜசிங்கமங்கலம் என் அழைக்கப்படும் ஆர்.எஸ். மங்கலம் 24.7.2018 ஆம் ஆண்டு தாலுகாவாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பிறகு பல ஆண்டுகளாகியும் ஆர்.எஸ். மங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அதே நிலையில் உள்ளது.
ஆர்.எஸ். மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், ஆர். எஸ். மங்கலம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்படவில்லை. இந்த தாலுகாவிற்குட்பட்டு மொத்தம் 39 கிராமங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மீனவ கிராமங்கள் ஆகும். ஆர். எஸ். மங்கலத்தில் இருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனை 35 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
எனவே ஆர்.எஸ். மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதால் இப்பகுதி மக்கள் உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். உயிரிழப்புகளும் அதிகமாகிறது.
தற்போது இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் குறைந்தளவே மருத்துவர்கள் செவிலியர்கள் பணியில் உள்ளனர். எனவே ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
மேலும் இங்கு தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களை நியமிக்கவும் உரிய உத்தரவிட வேண்டும். அதேபோல் ராமநாதபுரத்திலுள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை மருத்துவ உபகரண வசதிகளை ஏற்படுத்திடவும், தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப உதவியாளர்களை நியமிக்கவும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கோரிக்கை குறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.