தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு, மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
விருதுநகர் பகுதியைச் சேர்ந்த காந்திராஜன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், "தமிழ்நாட்டில் 2018-19ஆம் ஆண்டு ரூ.31,158 கோடி மதுவின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், ஆண்டு ஒன்றிற்கு தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்தினால் விபத்துகள், தற்கொலைகள், குடும்பப் பிரச்னைகள் காரணமாக 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
முழு மதுவிலக்கு அமல்படுத்துவதன் மூலம் தமிழ்நாட்டிற்குக் கிடைக்கும் வருமானம் பாதிக்க வாய்ப்புள்ளது என தமிழ்நாடு அரசு எண்ணுகிறது. ஆனால், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு முறைகளில் வருமானத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிலத்தின் மதிப்பைக் கணக்கிட வேண்டும்.
ஆனால், 2012ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது வரை, நிலத்தின் மதிப்புக் கணக்கிடப்படவில்லை. தற்போதைய விலை மதிப்பில் நிலத்தினைக் கணக்கிடுவதன் மூலம் 10,000 கோடி கூடுதல் வருவாய் பெற முடியும். மணல் விற்பனை மூலம் 20 ஆயிரம் கோடி மற்றும் தாது மணல் விற்பனை மூலம் 30 ஆயிரம் கோடி வருவாய் தமிழ்நாடு அரசுக்குக் கிடைத்து வருவதாக கூகுள் தகவல் கூறுகிறது.
மேலும் பிகார் மாநிலத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்திய பிறகு, பால் மற்றும் அதனை சார்ந்த பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமல்படுத்தினால் ரூ. 10,000 கோடி வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தி, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற தமிழ்நாடு அரசின் தேர்தல் அறிக்கையின்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நிர்வாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் குடிப்பழக்கத்தின் மூலம் இளைய தலைமுறைகள் சீரழிந்து வருகிறது. விபத்துகள் மூலம் பலர் உயிரிழக்கின்றனர். குடும்பத்தினரிடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டது. மேலும் இதேபோல் 2020ஆம் ஆண்டு இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது பேசிய நீதிபதிகள், இது தமிழ்நாடு அரசின் கொள்கை ரீதியான முடிவு என்றும்; எனவே, மனுதாரர் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மனு அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க: பொங்கல் பண்டிகை: ரூ 416 கோடிக்கு மது விற்பனை