மதுரை: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பகுதியைச் சேர்ந்த சுப்பையா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், 'அனைத்து அரசு அலுவலகங்களிலும் 20 ஆயிரம் ரூபாயிற்கும் மேல் நடைபெறும் வங்கிப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கி மூலமே நடைபெறவேண்டும் என்று வருமானவரிச் சட்டம் பிரிவு 269 கூறுகிறது. அதேநேரத்தில் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெறும் நிலம் விற்பனை தொடர்பான பத்திரப்பதிவுகள் அனைத்தும் பல லட்சங்கள் மதிப்பில் நடைபெறுகின்றன.
ஆனால், அவை வங்கிப் பரிவர்த்தனை மூலம் நடைபெறாமல், ரொக்கப் பணம் மூலமாகவே நடைபெறுகிறது. இதனால் கறுப்புப் பணம் புழங்கும் அபாயம் உள்ளது.
பலவிதமான சட்டவிரோதச் செயல்கள் இதன் மூலம் நடைபெற வாய்ப்புள்ளது. தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒரு நாளில் 2ஆயிரம் பத்திரப் பதிவுகள் நடைபெற்றால், அதில் 128 பத்திரப்பதிவுகள் வங்கிப் பரிவர்த்தனை மூலம் நடைபெற்றுள்ளது.
வழக்கு விசாரணை
இதன் மூலம் அந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த பதிவுகளில் 2.35 விழுக்காடு தான் சட்டப்படி, வங்கிப் பரிவர்த்தனை மூலம் நடந்துள்ளது. ஆனால், மீதமுள்ள 97.65 விழுக்காடு பணப்பரிவர்த்தனைகள் நேரடி பணம் மூலம் நடைபெற்றுள்ளது.
இதனால், கணக்கில் காட்டப்படாத கறுப்புப் பணம் கைமாறி உள்ளது. எனவே வருமான வரிச்சட்டம் 269இன் படி 20 ஆயிரம் ரூபாயிற்கு மேல் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வங்கிகள் மூலமாக, காசோலை ஆன்லைன் பரிவர்த்தனை மூலமே நடைபெற வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரரின் கோரிக்கை குறித்து, வணிகவரித்துறைச் செயலாளர், பத்திரப்பதிவு துறைத் தலைவர் உள்ளிட்டோர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!