மதுரை: தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகாவில் அரசுக்குச் சொந்தமான நிலங்களை முறைகேடாக பல்வேறு நபர்களுக்குப் பட்டா வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, அரசு அதிகாரிகள் உள்பட 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பலரிடம் விசாரணை நடத்துவதற்காக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
இதற்கிடையே வழக்கில் தொடர்புடைய 9 பேர் ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதே வழக்கில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் ரத்னமாலா, துணை வட்டாட்சியர் மோகன்ராம், நில அளவையர் சக்திவேல் ஆகியோர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை நேற்று (மார்ச்.3) விசாரித்த நீதிபதி முரளிசங்கர், "மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். இவர்களைக் கைது செய்ய வேண்டுமானால், உரிய வாரண்டு பிறப்பித்து. அதன்பின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு: கேரள அரசுக்கு அமைச்சர் துரைமுருகன் கடிதம்