மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள பி. சுப்புலாபுரம் கிராமத்தில் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் பானுகோபன் தலைமையில் முற்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர் ஆகிய இரு தரப்பினரிடையே செப்டம்பர் 5 ஆம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பட்டியலினத்தவர்கள் தரப்பிலிருந்து துரைமுருகன், அழகுராஜ் செல்லக்கண்ணு உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்டவர்களும், முற்பட்ட வகுப்பினர் தரப்பிலிருந்து ஜெயராம், முரளி உள்ளிட்ட ஆறுக்கும் மேற்பட்டவர்களும், கலந்துகொண்டனர். இரு தரப்பினரும் சுடுகாட்டுப் பிரச்னை, பட்டியலினத்தவர்கள் வசிக்கின்ற பகுதியில் நிலவும் சுகாதாரக் கேடு, உள்ளூர் கோயில் திருவிழா, தீண்டாமைச்சுவர், 100 நாள் வேலை உறுதி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து வருவாய் கோட்டாட்சியரிடம் கருத்துக்களை முன்வைத்தனர்.
ஜெயராம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தீண்டாமைச்சுவர் குறித்து முழுமையாக ஆய்வு செய்யப்பட்ட பின்னர் அதில் பொதுப்பாதை இருப்பதற்கான சாத்தியக்கூறு இருந்தால் அதனை அகற்றி தருவோம் என்று வருவாய் கோட்டாட்சியர் பானுகோபால் உத்தரவாதம் அளித்தார்.
பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவர்கள் முன்வைத்த தீர்மானங்களில் முக்கியத் தீர்மானமான பட்டியலினத்தவருக்கான சுடுகாட்டு சிக்கலை வருவாய் கோட்டாட்சியர் சரி செய்து தருவதாகவும் அக்குறிப்பிட்ட சுடுகாட்டில் தகரக் கூரை, தகனமேடை உள்ளிட்டவைகளையும் அமைத்துத் தருவதாகவும் வாக்குறுதி தந்தார். ஆனால் அவர்கள் பொது சுடுகாடு தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். இதனால் மற்ற தீர்மானங்களிலும் கையெழுத்திட மறுத்து அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இதன் காரணமாக பேச்சுவார்த்தை பாதியிலேயே முடிவடைந்தது
ஈடிவி பாரத் ஊடகத்திற்காக இரு தரப்பையும் சந்தித்து கருத்து கேட்க முயன்றபோது, முற்பட்ட வகுப்பினர் தரப்பில் பேச மறுத்து இந்த பிரச்னைக்கு மூல காரணமே ஊடகங்கள்தான் என்று குற்றம்சாட்டினர். பிறகு பட்டியலினத்தவர் தரப்பிலிருந்து பேசிய துரைமுருகன், சுடுகாட்டுப் பிரச்னையைப் பொருத்தவரை இரண்டு தரப்பிலும் சில தவறுகள் நடந்தன. ஆனால் எங்கள் மீது மட்டும் குற்றம் சுமத்தி காவல்துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. இதற்குரிய நியாயங்கள் குறித்து காவல்துறையினர் எங்களிடம் கேட்கவில்லை. எங்களைப் பொருத்தவரை பொது சுடுகாடு தான் ஒரே தீர்வு என்றார்.
அவரை தொடர்ந்து பேசிய கற்பகம் என்ற பெண்மணி, "முற்பட்ட வகுப்பினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ள தடுப்புச்சுவர் பட்டியலினத்தவர்களுக்கு பெரும் கேடாக அமைந்துள்ளதாகவும் கழிவுநீர் தேங்கி பல்வேறு சுகாதாரக் சீர்கேடுகளை விளைவிப்பதாகவும் இதனால் இந்த சுவரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார். பின்னர் பேசிய அழகுராஜ் "வழக்கமாக எந்த இடத்திலும் பட்டியலின மக்களுக்கு உரிய நீதி கிடைக்காது, அதே சூழலே இந்த அமைதிப் பேச்சு வார்த்தையிலும் எதிரொலித்துள்ளது. ஆகையால் எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை நாங்கள் போராடுவோம்" என்றார்
இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு கூறுகையில், உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற இன்றைய அமைதிப் பேச்சுவார்த்தை பட்டியலின மக்களுக்கான நீதியைப் பெற்றுத் தரவில்லை. ஆகையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து அதன் காரணமாக கூட்டத்தை புறக்கணித்து விட்டு வெளியேறி விட்டனர். இதற்கு உரிய நியாயத்தை மதுரை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட ஆட்சியரும் வழங்க வேண்டும். மறுக்கும் பட்சத்தில் எங்களின் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என்றார்.