மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் இன்று அதிகாலை நோயாளி ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மதுரை காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள கரும்பாலையைச் சேர்ந்தவர் முருகன். நரம்புத் தளர்ச்சி காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பாக மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் விரிவாக்க கட்டடத்தில் தங்கி சிகிச்சைப் பெற்றுவந்தார்.
இன்று அதிகாலை அம்மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த சில அடையாளம் தெரியாத நபர்கள் பயங்கர ஆயுதங்களுடன் உள்ளே புகுந்து சிகிச்சையிலிருந்த முருகனை சரமாரியாக வெட்டிப் படுகொலைசெய்தனர். பயங்கர ஆயுதங்களுடன் மருத்துவமனை வளாகத்திற்குள் ஓடியதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கரும்பாலை பகுதியில் கடந்த ஓராண்டிற்கு முன்பாக நடைபெற்ற கொலைச் சம்பவத்திற்கு பழிதீர்க்கும்விதமாக முருகன் இன்று வெட்டிப்படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனையடுத்து மதுரை மாநகர காவல் துறை துணை ஆணையர் கார்த்திக் தலைமையில் காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் பொதுமக்கள் முன்னிலையில், நோயாளி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.