மதுரை: கன்னியாகுமரி மாவட்டம் அருமனை பகுதியில் கடந்த மாதம் 18ஆம் தேதி சிறுபான்மை சமூகத்தின் உரிமை மீட்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய ஜார்ஜ் பொன்னையா, “நாகர்கோவில் தொகுதியில் எம்ஆர் காந்தி காசு கொடுத்து வென்றார். திமுக எம்எல்ஏக்கள் கோயிலுக்கு சென்று திருப்பணிகள் செய்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் திமுக வென்றது சிறுபான்மையினர் போட்ட பிச்சை. ஆகவே இந்து கோயில்களுக்கு சென்றால் உங்களுக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது” என்றார்.
அத்துடன், பாரத மாதா, நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் குறித்தும் அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை கைது செய்யாவிடில் இன்றும் (ஜூலை 24) போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில், பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மதுரை அருகே கள்ளிக்குடி என்ற பகுதியில் வைத்து காவலர்களால் கைதுசெய்யப்பட்டார். பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவுக்கு எதிராக பாஜக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் புகார்கள் அளித்திருந்தன. அந்தப் புகாரின் அடிப்படையில் பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவின் செல்போன் சிக்னலை வைத்து தனிப்படை காவலர்கள் கைதுசெய்துள்ளனர்.
இதையும் படிங்க : பாதிரியார் பொன்னையா போன்றோரை ஸ்டாலின் டூல்-கிட்டாக பயன்படுத்துகிறாரா - கரு.நாகராஜன் சந்தேகம்