மதுரை: புதுக்கோட்டை மாவட்டம் நற்பவளக்கொடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், "புதுக்கோட்டை மாவட்டம், நற்பவளக்கொடி ஊராட்சி மன்ற தலைவராக மணிமொழியன் இருந்து வருகிறார். இவர் பஞ்சாயத்து பொது நிதியில் முறைகேடு செய்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, ஊராட்சி மன்ற பொது நிதியில் முறைகேடு செய்த ஊராட்சி மன்ற தலைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார் குறித்து விசாரணை செய்யப்பட்டது. நடவடிக்கை நிலுவையில் உள்ளது என தெரிவித்தார். இதனை பதிவு செய்த நீதிபதிகள், புகார் தெரிவிக்கப்பட்டு 2 வருடம் ஆகியும், இன்னும் விசாரணை நிலுவையில் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது, இனியும் காலம் கடத்தாமல் புகார் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை செய்து, சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
இதையும் படிங்க:சென்னையில் காற்றின் தரத்தை கண்காணிக்க மேலும் 5 கண்காணிப்பு நிலையம்