மதுரையை சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், "தமிழ்நாட்டில் அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழந்தைகள் தங்குவதற்காக இல்லம் உள்ளது. இதில் குழந்தைகளுக்காக பேச்சுத்திறன், மனநல ஆலோசனை, விளையாட்டுப் போட்டிகள் என பல்வகை பயிற்சிகள் அளிக்கப்படும்.
இந்த இல்லம் தமிழ்நாட்டில் மிக குறைவான இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக், தமிழ்நாடு கேபிள் நடத்துகிறது. ஆனால், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதுகாக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தென் தமிழ்நாட்டில் திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய ஊர்களில் அறிவுசார் குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு இல்லம் அமைத்து அவர்களுக்கு பயிற்சி வழங்க உயர் அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மற்றும் நலத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.