மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தேனி மக்களவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் பொதுமக்களிடையே வாக்குகள் சேகரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அதன்பின்னர் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய ஆர்.பி.உதயகுமார், "பிரதமர் யார் என்றுக் கூற முடியாத கட்சிகள் எல்லாம், தேர்தலில் வாக்கு கேட்டு வருகிறார்கள். ஆனால் அதிமுக கூட்டணி, மோடிதான் பிரதமர் எனக்கூறி வாக்கு கேட்கிறது. ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் என்பதை தவிர வேறு எந்த குறையும் அவர் மீது கூறமுடியாது", எனவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் ரவீந்திரநாத் குமார் பேசுகையில், "ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்று பின்னர் அந்த தொகுதி மக்களவை நடுத்தெருவில் விட்ட தங்க தமிழ்ச்செல்வன், தற்போது தேர்தலில் நின்று என்ன செய்யப் போகிறார். தன்னை இளைஞர் - இளம்பெண் பாசறையின் நிர்வாகியாக ஜெயலலிதா நியமித்த பின்னர், ஒன்றரை லட்சம் தொண்டர்களை அதிமுகவில் இணைத்திருக்கிறேன்", என்றார்.