தமிழ்நாடு முழுவதும் சமீபகாலமாக ஒரு குறுஞ்செய்தி சமூக வலைதளமான வாட்ஸ்அப்பில் வேகமாகப் பரவி வருகிறது. கண் பார்வை இல்லாதவர்களுக்கு உலகை காண புதிய கருவி இந்தியாவில் அறிமுகம் என தொடங்குகிறது இந்த குறுஞ்செய்தி. மேலும் மக்களை ஏமாற்றுகிற சுவாரசிய வாசகங்கள் அடங்கிய கொல்கத்தா முகவரியுடன் ஒரு தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு கேட்கும் போது எட்டு லட்ச ரூபாய் மதிப்புள்ள அந்த கண் பார்வை குறைபாட்டை போக்கும் சிறப்பு கண்ணாடியை, 2500 ரூபாய்க்கு சலுகையாக விற்பனை செய்வதாக கூறுகின்றனர். அவர்களின் இந்த பொய்யான வாக்குறுதிகளை நம்பி தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் பலரும் ஏமாந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் இந்த சிறப்பு கண்ணாடியின் விற்பனை நடைபெற்றது. அதை வாங்குவதற்காக அங்கு சென்ற கண் பார்வையற்றோர் சிலர் அக்கண்ணாடியை வாங்கி பரிசோதித்தபோது போலி என தெரியவந்ததுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற புதூர் காவல் துறையினர் சந்தன் பானிக், சந்தானு கெளத்திரி என்ற இரண்டு வடமாநிலத்தவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.