மதுரை: இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள கைபேசி இல்லாத காரணத்தினால், பத்தாம் வகுப்பு மாணவன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் கள பணியாளராக பணியாற்றி வரும் ஜீவராணி, சமயநல்லூர் அருகேயுள்ள காந்திநகரில் தனது குழந்தைகளுடன் வசித்துவருகிறார்.
இவரது கணவர் முருகன் 13 ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நலக் குறைவால் காலமானார். மூன்று பெண் குழந்தைகள் இரண்டு ஆண் குழந்தைகள் என ஐந்து பிள்ளைகள் இவருக்கு உள்ளனர்.
இரண்டு பெண்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், மூன்றாவது பெண் மதுரையிலுள்ள ஒரு துணிக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.
நான்காவதாக உள்ள மகன் ஜீவகன், அங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியில் இருந்து இணையவழி வகுப்பு நடத்தப்படுவதால், தனது தாயாரிடம் கைபேசி வாங்கித் தர ஜீவகன் வலியுறுத்தியுள்ளார். வறுமை காரணமாக அவருக்கு தாயால் கைபேசி வாங்கிதர இயலவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் தாயிடம் கோபித்துக்கொண்டு, எட்டு நாள்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன் ஜீவகன் இன்னும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து தாய் ஜீவராணி பேசுகையில், இணையவழி வகுப்பு பயில்வதற்காக கைபேசி வாங்கிதர கேட்டு நச்சரித்து வந்தான். இதற்கிடையே வீட்டிற்கு வந்த பள்ளி ஆசிரியர்கள், இணையவழி கல்வி கற்க வசதியில்லாத மாணவர்களை, பள்ளிக்கு வரச் சொல்லி வகுப்பு எடுக்க தயாராக இருப்பதாகக் கூறினார்கள். ஆனால் அவன் கைபேசி தான் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தான். நான் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அவன் பொருட்படுத்தவில்லை.
நான் வேலைக்குச் சென்ற நேரம் பார்த்து வீட்டை விட்டு வெளியேறியவன், இன்றுவரை வீடு திரும்பவில்லை. சமயநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை என்று கூறினார். மேலும், தன் மகனை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார்.