மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ”உசிலம்பட்டி ஒன்றியத்திற்கு சொந்தமாக 557 கடைகள் உள்ளன.
அவற்றில் பெரும்பாலான கடைகள் 2007ஆம் ஆண்டு டெண்டர் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து 14 ஆண்டுகளாக எவ்வித டெண்டரும் நடத்தப்படவில்லை. உரிமம் மட்டும் புதுப்பித்து வழங்கப்பட்டுள்ளது.
அதன் காரணமாக வாடகை தொகையும் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. அந்த தொகையையும் பெரும்பாலானோர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக செலுத்தவில்லை.
அதனால், வசூலிக்கப்படாமல் உள்ள தொகையை வசூலிக்குமாறும், புதிய டெண்டர் மூலம் கடைகளை ஒதுக்கீடு செய்யுமாறும் ஊராட்சி ஒன்றிய தலைவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதையடுத்து 2020 டிசம்பர் 9ஆம் தேதி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டத்தில் கடைகளை உரிமை மாற்றம் செய்யத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனிடையே உறுப்பினர் கூட்ட வருகைப்பதிவேட்டின் கையொப்பங்களைத் தவறாகப் பயன்படுத்தி, ஊராட்சிமன்ற உறுப்பினர்களின் சம்மதத்தோடு 9 கடைகளுக்கு டெண்டர் நடத்தப்படாமல் உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு ஊராட்சி ஒன்றிய சட்ட விதிகளுக்கு எதிரானது. எனவே டெண்டர் நடத்தப்படாமல் உரிமம் மாற்றம் செய்யப்பட்ட 9 கடைகளுக்கும் உடனடியாக சீல் வைக்க உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களைப் பயன்படுத்தி உரிமம் மாற்றம் செய்த உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவி ரஞ்சனி சுதந்திரம், முன்னாள் ஆணையர்கள் ஜெயராமன், சங்கர் கைலாஷ், ஒன்றியக்குழு அலுவலர்கள் பாண்டி, சோலை குரும்பன், ஜி.பி. பாண்டி ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி, இதுதொடர்பாக உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றி தலைவி விளக்கமளிக்க வேண்டும். பொது ஏலம் நடத்தப்படாததற்கான காரணமும் தெரிவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டனர்.
அத்துடன் 9 கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பாக நடவடிக்கைகளைத் தொடர தடை விதித்தும், அந்தக் கடைகளுக்கு உடனடியாக சீல் வைக்கவும் உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: கட்டுமான முறைகேடு வழக்கில் நகராட்சி நிர்வாக ஆணையர் பதிலளிக்க உத்தரவு!