மதுரை மேல பொன்னகரத்தைச் சேர்ந்தவர் நன்மாறன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவரான இவர், மதுரையிலிருந்து இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மிக நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர் என மாற்றுக் கட்சியினராலும் போற்றப்படக் கூடியவர் நன்மாறன். இந்நிலையில், இன்று காலை மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு நன்மாறன் கோரிக்கை மனுவுடன் வந்திருந்தார்.
குறை தீர் முகாமில் பொதுமக்களுடன் வரிசையில் தனது மனைவியுடன் மனு கொடுப்பதற்காக காத்திருந்த அவரை அடையாளம் கண்ட சிலர், மாவட்ட வருவாய் அதிகாரி செந்தில்குமாரியிடம் அறிமுகப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து நன்மாறன் அவரிடம் கோரிக்கை மனுவை அளித்தார். அதில் ’நான் இப்போது மதுரை மேல பொன்னகரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். சொந்த வீடு எதுவும் இல்லாத எனக்கு, மாதா மாதம் வாடகை கட்ட முடியாமல் மிகவும் சிரமப்படுகிறேன். எனவே மதுரை ராஜாகூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில், எனக்கு வீடு ஒதுக்கித் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்’ எனக் கோரியிருந்தார்.
பின்னர் நன்மாறனிடம், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தும் சொந்தமாக வீடு கட்ட முடியாத நிலையில், கட்சியிலோ, நண்பர்களிடமோ ஏதும் உதவி கேட்டீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, சிரித்துக்கொண்டே ”நான் யாரிடமும் கேட்கவில்லை” என தெரிவித்து விட்டு ஆட்டோவில் புறப்பட்டுச் சென்றார்.
இதையும் படிங்க: பதவி முக்கியமல்ல; தேர்தலுக்குப்பின் நல்ல முடிவு! - வைகோ பேச்சு!