சேமிப்பு பழக்கம், சுற்றுச்சூழல் மீதான ஆர்வம், இவையிரண்டும் ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லாதவை என்றாலும், அவற்றை இணைத்து அழகான விழிப்புணர்வை இளம் தலைமுறையிடம் ஏற்படுத்தி வருகிறார் மதுரையை சேர்ந்த வேல்முருகன். விபத்து ஒன்றில் தனது வலது கை மணிக்கட்டை இழந்த வேல்முருகன், தன்னம்பிக்கையை இழக்காமல் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மரம், செடி, கொடிகளின் விதைகளோடு மண் கலந்து உண்டியல் செய்து வரும் அவரை நாம் சந்தித்தோம்.
அப்போது, தனக்கு தெரிந்த ஒன்றை சமூகத்திற்கு பயன்படும் வகையில் செய்ய வேண்டும் என்ற நோக்கமே, விதை உண்டியலுக்கான அடிப்படை காரணம் என்றார் வேல்முருகன். அதோடு, சமூக ஆர்வலர் அசோக்குமார் தூண்டுதலின் பேரில் விதை உண்டியலை உருவாக்கி குழந்தைகளுக்கு வழங்க முடிவு செய்ததாக கூறும் அவர், இதனால் மாற்றம் நிகழும் என நம்புவதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வகை உண்டியல்களால் குழந்தைகளுக்கு சேமிப்பு பழக்கம் அதிகரிப்பதோடு, சேமிப்புக்கு பிறகு உண்டியலை உடைத்த பின் மிஞ்சும் சில்லுகளை புதைத்து வைத்தால், அதிலிருந்து செடி கொடிகள் வளர்வதை பார்க்கையில், அவர்களுக்கு புது நம்பிக்கையும், உற்சாகமும் பிறக்கும் என்கிறார் வேல்முருகன்.
இளைய தலைமுறையிடம் தற்போது வளர்ந்து வரும் பிளாஸ்டிக் மோகத்தை தடுப்பதற்காகவும், அவர்களிடையே சேமிப்பு பழக்கத்தை உருவாக்கவும் நினைத்து, அதற்கு மண்ணாலான விதை உண்டியலை பயன்படுத்த எண்ணி, இதை செய்துவருவதாகவும், ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று விதை உண்டியலின் அருமைகளை விளக்கவுள்ளதாகவும் கூறுகிறார் சமூக ஆர்வலர் அசோக்குமார்.
சேமிப்போடு சேர்த்து மரம் வளர்க்கவும் விதை உண்டியல் பயன்படுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறும் சிறுவர்கள், உண்டியலின் நன்மைகளை நண்பர்களுக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் சேமிக்க வலியுறுத்துவோம் என்றும் உற்சாகத்துடன் கூறுகின்றனர்.
ஒருகாலத்தில் குழந்தைகளிடையே சேமிப்பு பழக்கத்தை உருவாக்க உண்டியலை வழங்குவது வீடுகளில் இயல்பான நடைமுறையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவ்வழக்கம் மறைந்து விட்டது. சுற்றுச்சூழல், சேமிப்பு ஆகியவற்றோடு சேர்ந்து மண்பாண்டத் தொழிலும் வளரும் இம்முயற்சி, குழந்தைகளிடம் விதைக்கப்பட்டிருப்பதால், அது நிச்சயம் ஒருநாள் விருட்சமாகும் என்பதில் அய்யமில்லை.
இதையும் படிங்க: சாரட்டு வண்டியில் வந்த சாதனை வீரர் நடராஜன்: சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு!