தர்மபுரி: எம்பி செந்தில்குமார் இன்று (ஜூலை 1) மேச்சேரி-தொப்பூர் நெடுஞ்சாலையை ஆய்வுசெய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தர்மபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிமெண்ட் விற்பனைக் கூடங்கள் அதிமாக உள்ளதால் லாரி போக்குவரத்து அதிகளவில் உள்ளது. அதன் காரணமாக மேச்சேரி-தொப்பூர் நெடுஞ்சாலை ஒன்றரை ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது.
இங்கு நளொன்றுக்கு இரண்டு விபத்துகள் ஏற்படுகின்றன. இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்கியுள்ளனர். இது குறித்து மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களைக் கேட்டால், தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் பொறுப்பு உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, 2017ஆம் ஆண்டு மாநில நெடுஞ்சாலையாக இருந்த மேச்சேரி-தொப்பூர் சாலையை ஒன்றிய அரசிடம் நான்கு வழிச் சாலையாக மாற்ற ஒப்படைத்துள்ளார்.
ஆனால் தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், நாளொன்றுக்கு 20 ஆயிரம் வாகனங்கள் சென்றுவரும் சாலையை மட்டுமே நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியும். இந்தச் சாலையில் 8,000 வாகனங்கள் மட்டுமே சென்றுவருவதால், நான்கு வழிச்சாலையாக மாற்ற முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்தச் சாலையை 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவும், சாலையை ஒன்றிய அரசிடமிருந்து பெற்று கட்டணமில்லா நான்கு வழிச்சாலையாக மாற்றவும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கைவைக்கவுள்ளேன்" என்றார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் இணைந்தால் வரவேற்போம் - எம்.பி. செந்தில்குமார்!